முருகன் டாலர் சட்டைக்கு வெளியே இருப்பது பத்தாவது பரீட்சை எழுத முதன் முதலில் எடுத்தது கூலிங் கிளாஸ் போட்டது நாங்கள் நண்பர்கள் சேர்ந்து சென்று தனித் தனியே எடுத்துக் கொண்டது இன்றும் வீட்டுக்குத் தெரியாது அடுத்தது விண்ணப்பத்திற்கு. கருப்பு கோட் சிவப்பு டை காம்பினேஷன் வேலை கிடைக்காவிட்டாலும் கல்யாணம் கூட்டிக் கொடுத்தது. ரொம்ப நாள் இருந்தது அப்புறம் வங்கிக்கணக்குக்கு ஒருதரமும் வண்டி வாங்கியபோது ஒருதரமும் ரேஷன் கார்டுக்கு அதிலொன்றையே டெவலப் செய்ததாய் நினைவு அதற்கப்புறம் எடுத்ததெல்லாம் டிஜிட்டல் இடது நெற்றித் தழும்பில்லாமல் பளிச்சென்றிருக்கும். இப்போது நீங்கள் பார்த்து விட்டு வந்திருப்பது கூட டிஜிட்டல் தான் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது லைப் இன்சூரன்ஸ்க்காக எடுத்தது மகனுக்கோ மருமகளுக்கோ பிடித்துப் போயிருக்க வேண்டும் நாளிதழ்களுக்குக் கொடுத்துவிட்டார்கள் தோற்றம் மறைவு தேதிகளோடு.