Skip to main content

2003 #ஸ்மைலிகள்


கிழிக்கப்பட்டுக்
கப்பலாகிப் போன
டைரியின் நடுப்பக்கத்தில்
என்ன எழுதப்பட்டிருக்கும்
இப்பெருமழை பெய்திருக்காவிடில்.  

சமீபத்தில் புரட்டிப் பார்க்க நேர்ந்தவென்  பழைய டைரிக்குள் கிடந்ததிந்த மழை. நீளமில்லாது சற்றே சதுரத்தைத் தொட்டு நிற்கும் அந்த நீல நிற டைரி நினைவில் நன்றாகவிருக்கிறது. புத்தம் புதிய டைரியில் பெயர் எழுதவும் மனம் வராது,  பின் அடுத்த ஆண்டில் ரஃப் நோட்டாகப் பிரயோகிக்கும் பள்ளிக்கூடச் சிறுவனிலிருந்து கொஞ்சம் பெயர்ந்து நான் எழுதியிருந்த முதல் மற்றும் ஒரே டைரி அது.

2003

திறந்ததும் பெயர் புனைவில்லாதிருந்தது. முகவரியும் முதலிரண்டு மாதங்களும் ஒன்றுமற்றிருந்தன. அடுத்ததான பக்கங்களிலும் பீக்கருக்குள் தண்ணீர் வரையும் சிறுவன் தெளித்துப் போகும் கோடுகளைப் போல சிற்சில ஒற்றை வரிகளே  விரவப்பட்டிருந்தன.

'தரச் சந்தர்ப்பமில்லை.. பேனா மூடிக்குள் நான்' என்று திறந்து கொண்டது தொடக்க நாள்.

'ஒவ்வொரு முறையும் இரண்டிரண்டு பக்கங்களாகவே திறக்கின்றன புத்தகங்கள்' என்று சலித்தது ஓர் ஒற்றைப் பக்கம்.

'சட்டென நின்றுவிட்ட போதும் நீ மழை'  என்பதின் நீ என்ன பாலாகவுமிருக்காலாம் என்ற எண்ணம் தோன்ற விடாமல் தொடர்ந்தன இன்னும் சில 'நீ'க்கள்.

நண்பன் பிறந்த கேக், நகரத் தெருவில் நகரத் திரிந்த பைக்,  தலைமேல் பிரதிபலிப்பானில் எழுதிப் படித்த மைக் என்று ஆங்காங்கே சில ஆங்கில ஸ்மைலிகள்.

தொலைந்துபோன புதுச் சட்டையைத் தொலைக்க முயன்றிருந்தன நிறையப் பக்கங்கள்.

வெறுமனே இருந்தன வேறு சில.

இறுதி இலக்கம் அழிக்கப்பட்டவொரு  தொலைபேசி எண்ணுடன் மூடிக் கொண்டது பின் அட்டை.

முனை மழுங்காமல் முடிந்து போனது மூன்றில் முடிவுற்ற இரண்டாயிரம்.

-----

முதல் வரியிலோடிய கப்பல் குறித்தான என் தேடலில் டைரியின் எவ்விடத்திலும், பெருக்கல் குறியின் குழிகளுக்குள் புள்ளிகள் தேங்கிய அதிமுக்கியம் என்பதாகவெந்தப் பெருமழையும் தென்படாதிருக்கையில் நடுப்பக்கம் கிழிந்திருந்தது தற்செயலெனக்  கொண்டாலும்,

'தொட்டு விடாதே.. பட்டாம்பூச்சிக்கு நடக்கத் தெரியாது' என்றோடும் வாசிப்பின் நடுவிலொரு சாயம் மங்கிய சாக்லேட் பேப்பர் பறக்கக் கிடைத்தது முழுதும் தற்செயலாகச் சாத்தியமில்லை.

Comments

solla thonuvathai solla theriyala...

athalaal..,

:)