:::: MENU ::::
  • Suitable for all screen sizes

  • Easy to Customize

  • Customizable fonts.

  • March 20, 2009
நிஜத்தை நகைத்தவாறு நகர்கிறது காலம்.... "குழந்தைகள் வருங்காலங்கள் ! நீங்களே நாளைய உலகம் !!" என்று எப்போதும் யாரேனும் வானொலியில் சொல்லிக்கொண்டு தானிருக்கிறார்கள்... நான் எப்போதோ தகுதி இழந்ததை அக்காவின் மகன் முறையோடு அழைத்து உறுதி செய்கிறான் .பள்ளி செல்கையில் பார்த்து வியந்த பாய்கிற ரத்தங்கள் பல இன்று ரத்த அழுத்த மருந்துகளோடு நடப்பது எதோ செய்கிறது...

அந்த மருத்துவமனைக்குள் நுழையும் போதும் ‘நான் குழந்தை அல்ல’ என்று மனதிற்குள் உரு போட்டுக்கொண்டே செல்ல வேண்டியிருந்தது. . நான் கொஞ்சம் வித்தியாசமாகத் தான் தென்பட்டிருக்க வேண்டும் அதனாலோ , அதையும் மீறியோ , சில குழந்தைகள் சிரித்தார்கள் ... . மொழி தெரியாது என முகத்தில் தெரிந்தது அவர்களுக்குப் பலம் கொடுத்திருக்க கொஞ்சம் கொஞ்சமாய் அதிகம் பேசினார்கள் ... இப்படித் தொடங்கிய காலைகளாய் இரண்டாண்டு சூரியன்கள் உதித்து ஓடியிருந்தன..

அத்தனை குழந்தைகளும் கடவுளுக்கு நிகர் ... ஆனாலும் சிலரோ கடவுள்கள். அப்படி கொஞ்சம் பேர் முதல் தினத்திலிருந்து தென்பட்டிருக்கிறார்கள் . அதில் சிலரே இன்னும் இருக்கிறார்கள்!! நீங்களும் பார்த்திருக்கலாம்.... இவர்கள் அநேகமாய் ஒரு தொப்பி அணிந்திருப்பார்கள் . மூக்கோடு சேர்த்து வாயை ஒரு முகமூடி மறைத்திருக்கும் . கை பற்றி தாயை வழி நடத்தி நகர்ந்துகொண்டிருப்பர்கள் ரத்தப் புற்றுநோய்ப் பிரிவை நோக்கி.....

இவர்களைப் புத்திசாலிகள் என்றோ கொஞ்சம் தைரியசாலிகள் என்றோ கூறிக் கடத்திவிட முடியாது.. இவர்களின் உலகங்கள் உங்கள் உணர்தலுக்கு அப்பாற்பட்டது... வண்ணங்கள் இவர்களைக் கவர்ந்ததில்லை... வானங்கள் மின்விசிறியன்றி வேறொன்றும் விரித்ததில்லை... உணவு வெளிவராமலிருக்க மருந்து... அந்த மருந்து உள்ளிறங்க உணர்வு... முழங்கை தொடங்கி இருதயம் நனைக்கும் ஊசி..அவ்வப்போது மூக்கில் வழியும் ரத்தம்...இத்தனைக்கும் மத்தியில் இரவலின்றிச் சிரிப்பவர்கள் கடவுளர்களன்றி வேறெவர்?

மொழியும் பணியும் புரியத் தொடங்கி நாட்களோடு ஓடுகையில் ஒருநாள்... 'எதையும் செய்யும்' என்று எப்போதோ படித்திருந்த அந்த சிவப்புத் திரவம் சொட்டுச் சொட்டாகத் தன்னுள் இறங்குவதையே பார்த்தபடி சற்றே பரிச்சயமான சிறுமி...சிறு கடவுள்... கேட்டாள்.... இந்த மருந்து தன்னைக் குணப்படுத்துகிறதா இல்லை சாகாமல் காக்கிறதாவென்று.... தொழில் தொட்டு இரண்டும் ஒன்று தானென்று கடவுளோடு விவாதிக்கும் திராணியெல்லாம் இல்லை எனக்கு !!
A call-to-action text Contact us